Centre for Christian Research / கிறித்தவ ஆய்வு மையம் (CCR)

Rev.Dr.S.Mani Valan SJ,
Founder and Director of the CCR.

கிறித்தவ ஆய்வு மையத்தின் (CCR) அடித்தளம்:

உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி உலக மொழிகளில் பழம்பெருமை வாய்ந்தது. பன்னெடுங்காலமாக இலக்கிய வளமையுடன் இலக்கண நிறைவுடன் விளங்குவது. உலகின் பல்வேறு நாடுகளில் அதிகமாகப் பேசப்படும் தமிழை அமிழ்தெனப் பருகி இந்தியர் மட்டுமல்ல மேலை நாட்டு மேதைகளும் மகிழ்வு கொண்டனர், வியந்து போற்றினர். பைந்தமிழ்ச் சோலையின் வளமை கண்ட அறிஞர்களும், புலவர்களும் தாம் இன்புற்ற நிலையில் இவ்வையகமும் தொடர தமிழுக்குத் தொண்டாற்றி வந்துள்ளனர்.

இந்த வகையில் தத்துவப் போதகர் எனப்படும் ராபர்ட் தே நொபிலி, வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி, சீகன் பால்கு, கால்டுவெல், ஜி யு போப் போன்ற பல மேலை நாட்டினரும் தஞ்சை வேத நாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப்பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர், ஆசுகவி ஆரோக்கியசாமி, சூ. இன்னாசி போன்ற உள் நாட்டுக் கிறித்தவச் சான்றோராகிய அறிஞர்கள் தமிழ் மொழிக்கு அரிய தொண்டாற்றி வந்துள்ளனர். தமது படைப்பிலக்கியங்களால் தமிழின் படைக்கலங்களைக் கூட்டியுள்ளனர். இவர்களைப் போன்று தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்தவப் புலவர் பெருமக்கள் பலர் உண்டு. இவர்கள் ஈன்றெடுத்த கிறித்தவத் தமிழ் இலக்கியங்கள் காலவெள்ளத்தில் ஒழிந்திடாமல் மீண்டெடுத்துத் தமிழ் உலகிற்கு வெளிப்படுத்தக் "கிறித்தவத் தமிழால் மானுடம் மலர" - கிறித்தவ ஆய்வு மையம்-Centre for Christian Research (CCR)-தொடங்கப்பட்டுத் தொடர்கின்றது.

கிறித்தவ ஆய்வு மையம் (CCR) தொடங்குவதற்கான பின்னணி:


  • இன்று கிறித்தவத் தமிழ் இலக்கிய நூல்கள் மிகவும் அரிதானதாக உள்ளன.
  • கிறித்தவத் தமிழ் இலக்கிய நூல்கள் பெரும்பான்மையும் எந்த நிறுவனத்திலும் பாதுகாத்துப் பராமரிக்கப் பெறவில்லை.
  • கிறித்தவ ஆய்வாளர்களுக்குக் கிறித்தவத் தமிழ் இலக்கிய ஆய்வைத் தொடர கிறித்தவ இலக்கிய நூல்களை எங்குப் பெறுவது என்னும் வினாவிற்கு விடை கூறுவார் இல்லை.
  • பல்வேறு ஆய்வாளர்கள் கிறித்தவத் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்திருந்தபோதிலும் எந்த ஆய்வாளர் எந்தக் கிறித்தவ இலக்கியத்தில் ஆய்வு செய்துள்ளார் என்று அறிய முடியாத நிலை.
  • கிறித்தவ ஆய்வு பற்றிய தகவல்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு கிறித்தவத் தமிழ் இலக்கிய நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலும் அவை வெளியிடப்படாமலும் உள்ளன.
  • கிறித்தவத் தமிழ் இலக்கிய நூல்களைத் தமிழ் உலகிற்கு வெளிக் கொணரும் எண்ணமே கிறித்தவ ஆய்வு மையத்தின் சிறப்பு நோக்கமாகும்.